All publications of Ram Kumar . Kuala Lumpur , Malaysia
உலகம் நாடுகள் புவி வெப்பமயமாதல் பிரச்சனையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. வரலாறு காணாத மழை, வறட்சி, பனிப்பொழிவு உட்பட்ட பல்வேறு பிரச்சனைகளை உலக நாடுகள் தற்போது சந்தித்து வருகின்றன. எல்வினோ மற்றும் எல்நினோ கால நிலை மாறுபாட்டால் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் உலக வெப்பமயமாதல் பிரச்சினை காரணமாக ஜப்பான் மிகப்பெரிய மழை அச்சுறுத்தலை சந்திக்க உள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானிய தலைநகரான டோக்கியோவில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் மழை பெய்து வருவதால் ஜப்பானின் தலைநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஜப்பான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து உள்ளது. மேலும் ஹகிபிஸ் என்ற சூறாவளி இன்னும் ஓரிரு நாட்களில் ஜப்பானை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹகிபிஸ் சூறாவளி நெருங்கு முன்பாகவே, ஜப்பானில் மிகப்பெரிய அளவில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில்வே சேவை, விமான சேவை உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஹகிபிஸ் சூறாவளி ஜப்பானில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் மேம்பாடு, பல்லுயிர் பராமரிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு இயற்கை பூங்காக்கள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தாம்சன் சிறப்பு இயற்கை பூங்கா 50 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த தாம்சன் சிறப்பு பூங்கா, மத்திய நீர்ப்பிடிப்பு பகுதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏராளமான பல்லுயிர்கள் வாழ்ந்து வருவதும், அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு விலங்குகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய நீர்ப்பிடிப்பு பகுதியில் வசிக்கும் விலங்குகளை பாதுகாக்கும் வகையில் இந்த தாம்சன் சிறப்பு இயற்கை பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் செயல்படும் ஏழாவது சிறப்பு இயற்கை பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இருக்கும் விலங்குகள் வாழிடங்களில் வசிக்கும் விலங்குகள், சாலைகளில் விபத்துகளை சந்திப்பதாகவும், அதன் காரணமாக பல்வேறு உயிரினங்கள் நாள்தோறும் உயிரிழந்து வருகிறது. அதை தடுக்கும் நோக்கில் இது போன்ற இயற்கை பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் சுற்றுப்புற சூழல் துறை தெரிவித்துள்ளது. பூங்கா அமைந்துள்ள பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த எச்சரிக்கை பலகைகள், பூங்கா பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது.
அதிக பணியாளர்களைக் கொண்ட நாடு என்ற பெயரை பெற்றுள்ளது சிங்கப்பூர். சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை வாசிகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பலர் சிங்கப்பூரில் பணிக்காக வந்து தங்கியுள்ளனர். இதில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருக்கும் பணியாளர்களுக்கு, சிங்கப்பூரில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பளத்தை சரியாக தருவதில்லை என்று நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிரந்தர குடியுரிமை வாசிகளுக்கும் பெரிய அளவில் சம்பள பாக்கி இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
சந்தை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 3 மாதகாலமாக அந்நிறுவனம் சம்பளம் தரவில்லை. தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு பணமில்லாத நிலையில் அவர் முத்தரப்பு கூட்டணியிடம் தனக்கு சம்பளம் வராத பிரச்சனை குறித்து புகார் அளித்தார். இதையடுத்து அந்நிறுவனத்தில் முத்தரப்பு கூட்டணி சோதனையிட்டது. அப்பொழுது அவருக்கு மட்டுமல்லாமல் மேலும் பலருக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக தெரியவந்தது. இந்நிலையில் பணியாளர்களின் சம்பள பாக்கியை முத்தரப்பு கூட்டணியின் பெற்றுக் கொடுத்துள்ளது.
இதேபோல் சிங்கப்பூர் முழுவதும் உள்ள நிறுவனங்களில், சம்பள பாக்கிகளை மீட்கும் பணியில் முத்தரப்பு கூட்டணி ஈடுபட்டுவருகிறது. இதுவரை 29 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி அளவுக்கு, பணியாளர்களின் சம்பளம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு வழங்கும் சம்பள விபரங்கள் குறித்து நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
அல்ஜூனிட் ஹவிகாங் நகர்மன்றத்தில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளுக்கு பொறுப்பேற்று, அதற்கான இழப்பீட்டுத் தொகையை பாட்டாளிக் கட்சியின் தலைவர் மற்றும் அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்த வேண்டும் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அல்ஜூனிட் நகர் மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பை எஃப்எம் சொல்யூஷன் அண்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு சிங்கப்பூர் பண மதிப்பில் 33 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டது.
ஆனால் இந்த நிறுவனம் அல்ஜூனைட் நகரத்தின் நிர்வாகத்தை சரிவர மேற்கொள்ளவில்லை எனவும், நகரின் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எஃப்எம் சொல்யூசன் அண்ட் சர்வீஸ் நிறுவனத்திற்கு அல்ஜூனிட் நகர நிர்வாகத்தின் பொறுப்பை வழங்கிய வகையில், பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரீதம் சிங் மற்றும் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களான சில்வியா லிம் மற்றும் தியாகியா ஆகிய மூவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அல்ஜூனிட் நகர நிர்வாகத்தில் ஏற்பட்ட இழப்பீட்டை இந்த மூவரும் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள, இழப்பீடு குறித்த கணக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த இழப்பீட்டு தொகை முழுவதும் இம்மூவரும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகையை இம்மூவரும் செலுத்தாத பட்சத்தில், அவர்கள் நொடிந்து போனவர்கள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் எனவும், மேலும் அம்மூவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட டைசன் நிறுவனம், சிங்கப்பூரில் மின்சார கார் உற்பத்தி செய்வதற்கான மிகப்பெரிய யூனிட்டை தொடங்கியது. வரும் 2021 ஆம் ஆண்டு முதல் இந்த யூனிட்டில் இருந்து மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீரென சிங்கப்பூரில் இயங்கிவரும் டைசன் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி யூனிட் மூடப்பட்டுள்ளது. விற்பனைக்கான வாய்ப்புகள் இல்லை என்ற காரணத்தினால், இந்த மின்சார உற்பத்தி நிறுவனத்தை மூடுவதாக டைசன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக இந்த டைசன் நிறுவனத்தின் சிங்கப்பூர் யூனிட்டில் பணியாற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் பணி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணி இழப்பை சரிக்கட்டும் வகையில் வேறு வகையான வேலைகள் அவர்களுக்கு தரப்படும் என அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மின்சார கார்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரில் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டதுதான் இந்த டைசன் நிறுவனம். சிங்கப்பூர் மக்களிடையே டைசன் நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு முற்றிலும் வரவேற்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் உலகமுழுவதும் 523 பணியாளர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி யூனிட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படும் என தெரிகிறது.
உலக நாடுகளின் கல்வி,, கலாச்சாரம் தொழில்துறை என பல்வேறு விஷயங்களையும் சிங்கப்பூர் சுவீகரித்துக் கொள்வதே அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என அந்நாட்டின் தொழில் துறை அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் பட்டதாரிகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களை வெளிநாட்டில் பணி செய்வதற்காக தயார் படுத்தும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு தயாரித்துள்ள தாக தெரிவித்துள்ளார். இதற்காக தொழில்துறை வணிகத் துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக நாடுகளில் செயல்பட்டுவரும் தொழில்துறை, பொறியியல் துறை ஆகியவற்றுக்கு ஏற்ப சிங்கப்பூர் மாணவர்களை தயார்படுத்தும் விதமாக, அரசு மானியத்துடன் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேகமாக மாறி வரும் உலகின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, உலகமயமாக்கலுக்கு தயாராகும்படி சிங்கப்பூரின் 60 நிறுவனங்கள் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதில் ஆகும் செலவில் 70 சதவிகிதத்தை சிங்கப்பூர் அரசு மானியமாக செலுத்தும் என அமைச்சர் சின் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். இவ்வாறாக திறனாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் சென்று வேலை செய்துவிட்டு சிங்கப்பூருக்கு திரும்புபவர்கள், சிங்கப்பூரின் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த உழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிகச் சிறிய நாடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் உலக அளவில் சாதனைகளை புரிந்து வருகிறது சிங்கப்பூர். உலக பொருளாதார மையத்தின் தரவுகள் படி இந்த ஆண்டின் போட்டி திறன்மிக்க பொருளாதாரத்தில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் சிங்கப்பூரின் தடையற்ற வர்த்தகம் தான் என உலக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தடையற்ற வர்த்தகத்துக்கு ஏற்படும் பாதகங்களை நீக்க வேண்டுமென சிங்கப்பூரின் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற, வர்த்தக தொழில் சபையின் ஐம்பதாவது ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், உலகம் முழுவதும் தடையற்ற வர்த்தகத்திற்கு எதிரான சூழல் நிலவுவதாக தெரிவித்தார். இந்நிலையில் தடையற்ற பொருளாதார ஒத்துழைப்பை வழங்க, உலக நாடுகள் தங்களுடைய ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். தெற்காசிய பிராந்தியத்தில், பொருளாதார முன்னேற்றத்திற்கு சிங்கப்பூர் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பொருளாதார முன்னேற்றத்திற்கான பங்களிப்புகளில், சிங்கப்பூர் முன்னேறி இருந்தாலும், மேலும் இலக்குகளை அடைய கடுமையான உழைப்பு தேவை இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஜப்பான் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது, என பாராட்டிய அவர். ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஜப்பான் தன்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் ஜப்பான் பல்வேறு வகையிலும் சிங்கப்பூருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது எனக் குறிப்பிட்டவர், மக்கள்தொகை சமநிலையை எவ்வாறு கையாள்வது என ஜப்பானிடமிருந்து சிங்கப்பூர் கற்றுக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் அரசு நிலங்களில் இருக்கும் தோட்டங்களில் பழங்களையோ காய்கறிகளையோ பறிப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்தை செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு நிலங்களில் உள்ள தோட்டங்களில் இருக்கும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை ஏன் படிக்க கூடாது என்பது குறித்து தெரிவித்திருக்கும் அரசு பூங்கா துறை இயக்குனர் ஹொக் சியோங், “அரசு நிலங்களில் இருக்கும் பழங்களை பறிப்பதும், இலைகள் காய்கறிகள் ஆகியவற்றை சுவைப்பது ஆகியவை தடைவிதிக்கப்பட்டுள்ளது, காரணம் அந்த பூங்காக்களில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அந்த உயிரினங்களின் உணவுக்காக அந்த மரங்களும், செடிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தனி நபர் ஒருவர் அந்த தோட்டத்திற்குள் புகுந்து பழங்களையும், இலைகளையும் பறிப்பது அந்த உயிரினங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கேடுகளை விளைவிக்கும்.
மேலும் ஒரு சிலர் பழங்களை பறிப்பதற்காக கற்களைக் மரங்கள் மீது வீசுவதால் மரங்களில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படும். மரங்கள் காயம் அடைவது, கிளைகள் முறிவது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. எனவே அரசு நிலத்தில் உள்ள மரங்களில் பழங்கள், இலைகள் ஆகியவற்றை பறிக்கக் கூடாது என்பது சட்டம் என்று தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான, சாலையோர நிலங்களில் இருக்கும் மரங்களிலிருந்து பழம் தானாகக் கனிந்து விழுந்தால் கூட எடுக்க கூடாதா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அவர், தானாக கனிந்துவிடும் பழங்களில் ஏதாவது தொற்றுகள் இருந்தால் அது மக்களுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கும், எனவே அவற்றை எடுப்பதற்கும் தடை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மையத்தால், உலகின் போட்டி திறன்மிக்க பொருளாதார நாடாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, சிங்கப்பூர் இந்த முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு, பொருளாதார நிலைத்தன்மை, வேலை உறுதித் தன்மை, பணியாளர்களின் கவனிப்பு, துறைமுகங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு தரவுகளை கணக்கில் கொண்டு, இந்த முதல் இடத்தை சிங்கப்பூருக்கு உலக பொருளாதாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூர் போட்டி திறன்மிக்க பொருளாதாரத்தில் முதலிடத்தைப் பெற்றதற்கு, சிங்கப்பூரின் தலைவர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் துணை பிரதமர் ஹெங் சுவீ கியெட், இதுகுறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வலுவான பணியாளர்கள், தடையற்ற பொருளாதாரம், முதலாளி மற்றும் தொழிலாளிகள் இடையேயான உறவு, சிறந்த உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் சிங்கப்பூர் போட்டி திறன்மிக்க பொருளாதாரத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் இதுகுறித்து கூறும்போது, நிலையான அரசு, திறன்மிக்க ஊழியர்கள் உள்ளிட்ட காரணங்களால் சிங்கப்பூரின் பொருளாதாரம் மேம்பட்டதாக தெரிவித்துள்ளார். உலகின் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருக்கும்போது சிங்கப்பூர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்க வெற்றி என்றும் அவர் தெரிவித்ததுள்ளார்.
இந்தோனேசியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் முன்னாள் இராணுவ தளபதியுமான விரண்டோ, தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் பண்டெங் மாகாணத்தில் அமைந்திருக்கும், பெண்டிங்லன் பகுதியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் விரண்டோவை, கூட்டத்தில் இருந்த இருவர் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர். இதன்காரணமாக அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவருடைய பாதுகாப்புக்கு நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும் அந்த இரண்டு பேரின் தாக்குதலால், காயமடைந்துள்ளனர். தாக்குதலால் காயமடைந்த இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் விரண்டோ, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை கத்தியால் குத்திய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அரசு விழாவுக்காக வந்திருந்த பாதுகாப்புத்துறை அமைச்சரை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து நிலையில், மக்கள் கண்முன்பே அமைச்சர் பிராண்டோ கத்தியால் குத்தப்பட்டது அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
72 வயதாகும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிராண்டு 2016 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியாவின் தலைமை பாதுகாப்பு துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அவர் இந்தோனேசியாவின் முன்னாள் ராணுவ தளபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.